Tuesday, January 31, 2006

என்னை உயிர் வாழ விடு.


அன்புக்காக புகலிடம் தேடி
அலைகின்ற
இந்த அகதிக்கு
ஆதரவு கொடு!

நான் கோழை இல்லை
என்று எண்ணினேன்
உன்னைக் காணும் வரை!

இப்போது
உன்னிடம் ஓர் வேண்டுகோள்

உன் மூச்சுக் காற்றினை
சுவாசித்துத் தான்
இந்த ஜீவன் உயிர்
வாழ்கின்றது என்பதை
யாருக்கும் நீ சொல்லி விடாதே!

என்னுயிர் பிரியும்
தருணத்தில்
உன்னுயிர் கொஞ்சம் தந்து
என்னை உயிர் வாழ விடு..........

Sunday, January 29, 2006

தமிழ்த் தாயே......


உன் மடியில் நான் அமர
ஏட்டுக் கல்வியை
கற்பித்'தாயே'

உயிரும் மெய்யும்
விளங்கிட செய்'தாயே'
எழுவாய் பயனிலை
எது என்று எமக்கு
உணர்வித்'தாயே'

வல்லினம் மெல்லினம்
இடையினம் என்று
எம் நாவில் அமர்ந்'தாயே'

அகர முதல தொட்டு
ஆத்தி சூடி வரை
அறிய வைத்'தாயே'

முத்தமிழ்
முக்கனியைக் காட்டிலும்
இனிமையானதென
சுவைத்தவர் நாவாலே
சுவையுடன் சொல்ல வைத்'தாயே'

அகத்தியர் முதல் அடியேன் வரை
உன் அன்பை பெறச் செய்'தாயே'

நின் பாதங்களுக்கு தினமும்
ஒரு தடவையாவது
பூஜிக்க
வரம் ஒன்று தருவாயா தாயே

அன்னியர்கள் உன் மீது
காதல் கொள்ள
உன் பிள்ளைகளோ......
பின்மாறிப் போகின்றார்கள்

என்றாவது ஓர் நாள்
தாய் அருமை தெரிந்து
கதறி அழுவார்கள்.

அப்போதோ
காலம் கடந்து நிற்கும்.

அன்னையின் மைந்தர்களே!
மனம் திரும்புங்கள்
தாயையும், சேயையும்
பிரித்த பாவத்தினை
தேடிக் கொள்ளாதீர்கள்

நாளை உன் பெயர் சொல்லும் சந்ததியினர்
புதிய ஓர் உலகம் அமைத்து
இயந்திர மயமாக வாழ்வதற்கு
நீயே
வழி வகுத்துக் கொடுத்து விடாதே!



www.nilafm.com

Monday, January 23, 2006

அகிம்சாவாதியாக மாறுவது எப்போது?


அணு ஆயுதமும்
ஆந்ரெக்ஸும்
செய்யாத வேலையை
உன் ஆயுதம் செய்யுமே!

விடுகதை போடுகின்றேன்
என்று எண்ணுகின்றாயா?
இல்லை உண்மை தான்

உன் கண்மணிகளை
கண்ணீர் நனைக்கும் முன்
என் இதயத்தை அல்லவா
அது வருடியது

போதும் பெண்ணே - நீ
தீவிரவாதியாக இருந்தது
அகிம்சாவாதியாக
மாறுவது எப்போது?

நீ என்னைக் காணாமலேயே
இருப்பது நன்று என்றாய்
அப்போது
என் இதயம் சிந்திய
இரத்த கண்ணீரை
நீ ஏன் அறியவில்லை?

உன் மனம் மென்மையானது தான்
ஆனால்
என் மனமும் பாறை கிடையாதே

போதும் பெண்ணே - நீ
தீவிரவாதியாக இருந்தது
அகிம்சாவாதியாக
மாறுவது எப்போது?

Tuesday, January 17, 2006

இளமையில் காதல்!


இளமையின் வேகம்
ஓமோனின் உந்துதல்
நண்பர்களின் தைரியம்
உணர்ச்சியைச் சொல்ல எழுத்துக்கள்
தூது செல்ல பலர் இருக்க..
எனக்குள்ளும் காதல் பிறந்தது!

பங்குச் சந்தையில் பல மங்கையர்கள்
எதை வாங்குவது...? எதை விற்பது...?
முன்னனுபவம் இல்லாததால்
முடிவு எடுப்பதில் திண்டாட்டம்.

இலாபத்தை மாத்திரமே
எட்டிப் பிடித்திடும் எண்ணம்
நட்டம் ஏற்பட்டால்
பின் விளைவுகள் எப்படி இருக்கும்
என்று அப்போது அறியாத வயது.

கூட்டிக், கழித்து, பிரித்துப் பார்த்ததில்
மூவர் தேர்வானார்கள்!
முதலில் யார்...? எப்படி...? எங்கே...?
முன்னனுபவம் இல்லாததால்
முடிவெடுப்பதில் அங்கேயும் திண்டாட்டம்.

கண்டீனுக்கு பின்னால்......
நம்பிக்கையுள்ள நண்பர்களின்
வட்ட மேசை மகா நாடு தொடங்கியது.

இங்கேதான் மிகவும் அவதானம் வேண்டும்
ஒற்றர்கள் உள்ளே நுழைந்து
செய்திகளை வெளியே கொடுத்து விட்டால்
நெய் கடையும் போது தாழி உடைந்த
கதையாகி விடும்.

தேர்வானாள் ஒருத்தி!
அதற்கு பல தகமைகள் அவளிடம்
அண்ணன் இல்லை, அப்பா வெளிநாட்டு வாசம்
அம்மா அப்பாவி
தம்பி எங்களுக்கு ஜூனியர்.

அவளை நாங்கள் தேர்ந்தெடுத்ததை
அவள் எப்படி தெரிந்து கொண்டாள்?
ஆச்சரியம் தான்!
நித்தம் நித்தம் என் கனவில் அவள்....

அவள் வருகைக்காக வீதித்தவம் ஆரம்பம்
நாட்கள் செல்ல செல்ல அவளில் தான்
எத்தனை மாற்றம்!
முடிவில் சிரிப்பை சிக்னலாகத் தந்தாள்
எனக்குள் இருந்த ஓமோன்கள்
அங்கேயும் இருக்குமோ என்னமோ?

நிலவில் கால் வைத்தவர்
இமயம் ஏறியவர்
ஆகாயத்தில் பறந்தவர்
எல்லோருடைய சாதனைகளும்
என் காலின் கீழே
என் முதல் முயற்சியே வெற்றி
இருக்காதா பின்ன...?

ம்....இனி என்ன எழுத்துக்கள்
எல்லாமே இப்போதுதான் தெரியுமே
எழுதுவோம் ஒரு காதல் மடல்
அதற்கு வேண்டுமே கவிதை
என்ன செய்வது?

மறுபடியும் வட்ட மேசை மகா நாடு கூடியது
முழு நண்பர்கள் சமூகம் தந்தார்கள் இங்கே
யாருமில்லை வெளி நடப்பு செய்யவில்லை....

நண்பர்களின் சிந்தனைக் குதிரைகள்
தறி கெட்டு ஓடியது
ஓடும் போது கிடைத்த சொற்களை
மொத்தமாக சேர்த்து எழுதினேன்
ஒரு காதல் கவிதை
எனது கையெழுத்து பறைசாற்றியது
எனது கவிதை அது என்று.

செய்திக் காகிதம் கட்டிய புறாவானான்
நண்பன் ஒருவர்
செய்தி மங்கை நோக்கி சென்றது.
அதற்கு முன் செய்தேன் ஓர் ஒப்பந்தம்.
தூது புறாவிடம்
நோட்ஸ் எழுதுவது செலவுக்கு
ஆப்பப்ப கொஞ்சம் பணம்
காரியம் ஆக செலவு செய்யத் தானே வேண்டும்.

முதல் பிரசவத்திற்காக பல தந்தையர்கள்
குட்டி போட்ட பூனையைப் போலானார்கள்

போன வேகத்தில் புறா திரும்பி வந்தது
கையில் செய்தியோடு
மீண்டும் அவரச மகாநாடு கூடியது
மடல் உயில் போன்று அனைவரினதும்
முன்னே படிக்கப்பட்டது

அதிலே நேரிடையாக பதில் இல்லை
ஆனாலும் மறைமுகமாக
சம்மதம்தான் அர்த்தம் என்று
மொழிபெயர்த்தான் அறிவுஜீவி ஒருவன்.

குட்டிக் கவிஞர் ஒருவன்
இந்த பூமியில் உதயமாக காரணமானவள் அவள்
பசிக்கு பல தடவை
அகராதியில் அர்த்தம் தேடி
தோற்று விட்டேன்
நித்திரையில்லை
ஆனாலும் கனவில் அவள் வருவாள் என்பதால்
படுக்கையில் உருண்ட நாட்கள்தான் எத்தனை...?

இந்த உலகம் எனக்காகவே படைக்கப்பட்டது என்று
என மனம் தினமும் சொல்லும்
யார் மேலும் கோபம் இல்லை
அடித்தாலும் திட்டினாலும்
கோபம் மாத்திரம் வருவது கிடையாது!
பதில் செய்தியில் இருந்தே
நானும் அழகானவனா...?
என்ற புதிருக்கு விடை கிடைத்தது.

நாட்கள் வாரங்கள்
மாதங்கள் வருடங்கள் என்று கழிந்தன.
இப்போது தூதுவர் கிடையாது
ஒற்றர்கள் பயம் இல்லை காரணம்
அவர்கள் வீட்டிலும் எங்கள் வீட்டிலும்
எங்கள் உறவுக்கு
பச்சை கொடி காட்டி விட்டார்கள்.

காலத்திற்குத்தான் எவ்வளவு அவசரம்..?
கால சக்கரத்தின் சுழற்சியில்
அவள் என் மனைவியானாள் என்பதை விட
நான் அவளுக்கு கணவனானேன்
என்பதே தகும்.

மனிதர்களின் மனங்கள் இப்படியும் மாறுமா?
அன்று எனக்கு தேவதையானவள் இன்றும்
எனக்கு தேவதைதான்
ஆனால் அதிலே ஒரு சிறிய மாற்றம்
துர்தேவதை அவள்!

அவளுக்கு மட்டும் என்னவாம்
என்னை கட்டியதற்கு
சன்னியாசம் போயிருக்கலாம்
என்ற பல்லவி தான்
எங்கள் வீட்டு சுப்ரபாதம்!

சுகந்திரம் முற்றிலும் பறிபோன நிலையில்
வீட்டுக் காவலில் நான்.
பகலில் சிரித்த முகத்துடன் இருக்கும் அவள்
நான் வேலை விட்டு வீடு வந்ததும்
அவள் மெளனவிரதத்திற்கு மாறி விடுவாள்.

இனியும் மாற்றம் இல்லா வாழ்க்கை
வாழ்ந்தால், வாழ்வதிலே
அர்த்தமே இல்லாமல் போய் விடும் என்று
தொலைநோக்கோடு
எடுத்தேன் ஓர் முடிவு.

சுகந்திர காற்றை
சுவாசப்பை நித்தம் கேட்டு தொல்லை தந்தது.
கண்களை மூடி
சுகந்திர காற்றை சுவாசிக்கும் நோக்கோடு
ஏறினேன் சட்ட வாசல்
அங்கேயும் திண்டாட்டம்
முடிவு எடுக்க முடியாத படி
கையை இறுக பற்றிய என் குழந்தை.




www.nilafm.com

Monday, January 16, 2006

காத்திருக்கின்றேன்.


அன்று ஒரு நாள்
ஆற்றங்கரைதனில்
இலைமறை காயாக கண்டேன் அவளை!
ஈர்த்து விட்டாள் என்னையவள்
உண்மை ஒன்று சொல்லவா
ஊருக்குள் அழகி அவள் மட்டும் தான்
எண்ணில் அடங்கா ஆசைகள்
ஏக்கத்தில் இங்கே தவிப்புக்கள்
ஐயெட்டு வயதை கடந்தவளே
ஒரு வார்த்தை சொல்ல மாட்டாயா
ஓடமாய் ஓடுகின்றேன் வழிகளின்றி
ஓளடதமாய் இருப்பாயா என் நோயிக்கு
அஃதே வருவாய் என்று காத்திருக்கின்றேன்.

Wednesday, January 11, 2006

***உன் முகவரி தேடி...***


இது என்ன கொடுமை!
என்னை நானே சந்திக்க
உன்னிடம் ஏன்
முன் அனுமதி பெற வேண்டும்?

நீ வேறு நான் வேறு என்று
யார் உனக்கு சொன்னது?

ஆதவன் வருகைக்காக அல்லி
அல்லவா காத்திருக்கும்
இது தானே இயற்கை

இங்கே அல்லியின் வருகைக்காக
ஆதவன் அல்லவா
காத்துத் தவம் கிடக்கின்றான்!

முழு மதியே!
நீயும் ஒரு முறை
உன் முகம் தனைக் காட்டி
என் வீட்டில்
உன் பாதங்களை பதித்துச் செல்வாயா?

உன் பாதச் சுவட்டில்
படுத்துறங்கி விட எனக்கும் ஆசைதான்!



www.nilafm.com

நான் இறக்கும் வரை.......




பூக்கள் மலர்வது
உன்னைக் கண்டு!
நான் நித்தம் பிறப்பதும்
உன்னைக் கண்டு!

என்றுமே புன்சிரிப்பு
கண்டேன் உன் வதனத்தில்
ஒய்யாரத்தில் மறு பெயர்
நீயல்லவோ எனக்கு!

உன் மீது ஆசை
கொள்ளாதோர் தான்
இருக்க முடியுமா
இவ்வுலகத்தில்....?

நீ இல்லாத இரவுகள்
மகா கொடியவை
உன் செல்ல சினுங்கள்
தாலாட்டு பாட்டல்லவோ!

நித்தம் நித்தம் உன்
மேனி தொட்டு தொட்டு
என் கைகள் கூட
புனிதமாகி விட்டது!

எனக்கு மீண்டும்
ஓர்பிறவி இருந்தால்!
உன்னைப் போன்றே குழந்தையாக
பிறந்து இருந்திட வேண்டும்
நான் இறக்கும் வரை!