Monday, April 24, 2006

அவள் கூந்தல் வாசம்!


பூக்களைப் பறித்தேன்
அங்கே கண்டதெல்லாம்
அவள் முகம்!

இரவுநேர வான் வெளியில்
கண்டேன்
அங்கேயும் அவள் முகம்!

கோயிலுக்குப் போனேன்
அங்கே ஓர் அதிசயம்
அம்மன் வடிவில் அவள் உருவம்...!

தனிமை கூட
இப்போது இனிக்கின்றது
அப்போது தான்

என்னருகில் அவள்!

வாசனையில் சிறந்த வாசனை
எதுவென்று என்னிடம் கேட்டால்.....
என் பதில்

அவள் கூந்தல்!

பசிக்கின்றது சாப்பிட
முடியவில்லை
என் கையில் அவள் வாசனை!

Friday, April 21, 2006

உரு மாறிடவோ உனை மீட்டிடவோ



புல்லாக நான் மாறவோ...?
உன் பாதம் தொடுவதற்கு!

தென்றலாக மாறவோ....?
உன் கூந்தல் வருடுவதற்கு!

மாலையாக மாறவோ மங்கை உன்
சங்கு கழுத்து தழுவுவதற்கு

வார்த்தையாக வந்திடவோ...
இதழில் தவழ்வதற்கு....!

கனவாக வந்திடவோ
உன் நினைவுகளில் உறங்கிடவே!

மழைத்துளியாக உரு மாறவோ.......?
உன் மேனியில் விளையாடிடவே!

நான் நானாகவே வந்திடவோ.......?
உன்னை என்னவளாக பெற்றிடவே.......

Thursday, April 20, 2006

மனிதனுக்கு நிகர் மனிதனே!



நீதி தேவதையின் கண்களைக் கட்டி
தனக்கு சாதகமாக
நீதிகளை அமைப்பதில்
மனிதனுக்கு நிகர் மனிதனே!

வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தால்
அது குற்றம் என்றால்
வளர்ந்த கிடாவின் கழுத்தில்
கத்தி வைப்பது எவ்வகையில்
நியாயம்?

ஜாதிகள் இல்லையடி பாப்பா
என்றான் பாரதி
ஜாதிகள் இல்லை என்றால்
நாம் இல்லை என்றான் அரசியல்வாதி!

கூன் குருடு செவிடு இல்லாமல்
பிறப்பது அரிது என்றாள் ஒளவை
இவர்கள் இல்லை என்றால்
நான் எப்படி என்றான் நடிகன்!

கடவுள் பெயரை சொல்லி
காவு கொடுத்து படையல் படைத்து
தன் வயிற்றை நிரப்புகின்றான்
அவன் பெயர் பூசாரி!

நீதி தேவதையின் கண்களைக் கட்டி
தனக்கு சாதகமாக
நீதிகளை அமைப்பதில்
மனிதனுக்கு நிகர் மனிதனே!

Wednesday, April 19, 2006

நாசியால் சுவாசிக்கும் மனிதன்



வேதாகமத்தில் ஓர் வரி
இப்போது எனக்கு புரியும் வரி
"நாசியால் சுவாசிக்கும் மனிதன்
எம் மாத்திரம்"

மனிதர்களில் தான்
எத்தனை வர்ணங்கள்.

ம்..... எல்லாம் மனிதனுக்கு மாத்திரம் தான்!
ஆனால்......
இறைவனால் மனிதனுக்கா?
மனிதனால் மனிதனுக்கா?

இந்தப் புதிருக்கு மாத்திரம்
விடையில்லை
விடை தெரியும் போது
மனிதன் மனிதனாக இல்லை!

Tuesday, April 18, 2006

என்னுயிர் நீயம்மா!



லட்சியம் இல்லாமல்
பிறந்து விட்டேனோ
என்று எண்ணினேன்
உன்னைக்காணும் வரையம்மா.

அரண்மனை
வாசம் கூட
நீ இல்லை என்றால்
அகதி வாழ்க்கை தானம்மா!

இரவு நேரத்திலும்
உனை சுற்றி வரும்
நிழல் நானென
அறிவாயோம்மா!

உன் படம்
வரைகையில்
இடை நடுவே தூரிகை
முறிந்ததென்னம்மா!

உன்னை நான்
பிரிகையில்
தாயின் பிரசவ வேதனையை
உணர்கின்றேனம்மா!

ஒன்று மாத்திரம் உண்மை
உன் நினைவுகளில் தான்
என் உயிர்
வாழ்கின்றதம்மா!



Saturday, April 01, 2006

நடந்து வந்த பாதை.


நிலைகள் மாறுகின்ற இவ் உலகில்
நிலைத்து நிற்பவை தான் எத்தனை
நினைவில் உள்வவற்றை எண்ணிப் பார்த்தால்
நிறைவில் வரும் பதில் பூஜியமே!

நித்திய வாழ்க்கை பூவுலலில் இல்வே இல்லை
நித்திராதேவி நிரந்தரமாக அழைக்கும் வரை தான்
நிந்தனைகள் சிந்தனைகள் அனைத்தும்
நிரந்தரம் இல்லா வாழ்வு தான் எப்போதும் உன் கையில்!

நிர்மூலமாய் ஆகிவிட்ட உன் வாழ்வில்
நிர்மாண பணிகள் தான் எப்போது
நிவர்த்தி செய்திட தான் முடியுமா?
நிமிர்ந்து எழுந்திடுமோ உன் வாழ்வு!

நித்தம் சித்தம் பேதலித்து
நிபந்தனை சட்டங்களுக்கு கட்டுப்பட்டு
நிம்மதியான மனநிலை இல்லாது
நிர்கதியாகி விட்டாய் இப்போது

நில அதிர்வுகளுக்கு
நிதிகளை சேகரித்தாய்
நிவாரணங்கள் பலவும் செய்தாய்
நியதிகளை மாற்றியமைக்க உனக்கு என்ன தகுதி

நிலங்களுக்கு அதிபதியான உனக்கு
நிலமைகளை ஆராய ஏதிங்கே நேரம்
நிறுத்திவிடு உன் அதிகாரங்களை
நின்றுவிடும் வீண் விவாதங்கள் இங்கே

நிமிடங்கள் பல மில்லியன்கள் இறந்தும்
நிதர்சண உண்மைக்கு புறம்பாக நீ செயல்பட்டாய்
நியமனம் ஆகிவிடுவாய் பாவிகளின் பட்டியலில்
நியாயத் தீர்ப்புக்கு வெகுவிரைவில் ஆயுத்தமாகி விடு!

நிலவிலே கால் வைத்த மமதையில்
நினைவிழந்து ஆட்டம் போடுகின்றாய்
நிர்ணயம் தேவையில்லை பூமியில் ஈர்ப்பு எப்போதும் கீழ் நோக்கியே
நீ நீதி தேவதையில் முன் மனம் திரும்புவது எப்போது?