இளமையில் காதல்!
இளமையின் வேகம்
ஓமோனின் உந்துதல்
நண்பர்களின் தைரியம்
உணர்ச்சியைச் சொல்ல எழுத்துக்கள்
தூது செல்ல பலர் இருக்க..
எனக்குள்ளும் காதல் பிறந்தது!
பங்குச் சந்தையில் பல மங்கையர்கள்
எதை வாங்குவது...? எதை விற்பது...?
முன்னனுபவம் இல்லாததால்
முடிவு எடுப்பதில் திண்டாட்டம்.
இலாபத்தை மாத்திரமே
எட்டிப் பிடித்திடும் எண்ணம்
நட்டம் ஏற்பட்டால்
பின் விளைவுகள் எப்படி இருக்கும்
என்று அப்போது அறியாத வயது.
கூட்டிக், கழித்து, பிரித்துப் பார்த்ததில்
மூவர் தேர்வானார்கள்!
முதலில் யார்...? எப்படி...? எங்கே...?
முன்னனுபவம் இல்லாததால்
முடிவெடுப்பதில் அங்கேயும் திண்டாட்டம்.
கண்டீனுக்கு பின்னால்......
நம்பிக்கையுள்ள நண்பர்களின்
வட்ட மேசை மகா நாடு தொடங்கியது.
இங்கேதான் மிகவும் அவதானம் வேண்டும்
ஒற்றர்கள் உள்ளே நுழைந்து
செய்திகளை வெளியே கொடுத்து விட்டால்
நெய் கடையும் போது தாழி உடைந்த
கதையாகி விடும்.
தேர்வானாள் ஒருத்தி!
அதற்கு பல தகமைகள் அவளிடம்
அண்ணன் இல்லை, அப்பா வெளிநாட்டு வாசம்
அம்மா அப்பாவி
தம்பி எங்களுக்கு ஜூனியர்.
அவளை நாங்கள் தேர்ந்தெடுத்ததை
அவள் எப்படி தெரிந்து கொண்டாள்?
ஆச்சரியம் தான்!
நித்தம் நித்தம் என் கனவில் அவள்....
அவள் வருகைக்காக வீதித்தவம் ஆரம்பம்
நாட்கள் செல்ல செல்ல அவளில் தான்
எத்தனை மாற்றம்!
முடிவில் சிரிப்பை சிக்னலாகத் தந்தாள்
எனக்குள் இருந்த ஓமோன்கள்
அங்கேயும் இருக்குமோ என்னமோ?
நிலவில் கால் வைத்தவர்
இமயம் ஏறியவர்
ஆகாயத்தில் பறந்தவர்
எல்லோருடைய சாதனைகளும்
என் காலின் கீழே
என் முதல் முயற்சியே வெற்றி
இருக்காதா பின்ன...?
ம்....இனி என்ன எழுத்துக்கள்
எல்லாமே இப்போதுதான் தெரியுமே
எழுதுவோம் ஒரு காதல் மடல்
அதற்கு வேண்டுமே கவிதை
என்ன செய்வது?
மறுபடியும் வட்ட மேசை மகா நாடு கூடியது
முழு நண்பர்கள் சமூகம் தந்தார்கள் இங்கே
யாருமில்லை வெளி நடப்பு செய்யவில்லை....
நண்பர்களின் சிந்தனைக் குதிரைகள்
தறி கெட்டு ஓடியது
ஓடும் போது கிடைத்த சொற்களை
மொத்தமாக சேர்த்து எழுதினேன்
ஒரு காதல் கவிதை
எனது கையெழுத்து பறைசாற்றியது
எனது கவிதை அது என்று.
செய்திக் காகிதம் கட்டிய புறாவானான்
நண்பன் ஒருவர்
செய்தி மங்கை நோக்கி சென்றது.
அதற்கு முன் செய்தேன் ஓர் ஒப்பந்தம்.
தூது புறாவிடம்
நோட்ஸ் எழுதுவது செலவுக்கு
ஆப்பப்ப கொஞ்சம் பணம்
காரியம் ஆக செலவு செய்யத் தானே வேண்டும்.
முதல் பிரசவத்திற்காக பல தந்தையர்கள்
குட்டி போட்ட பூனையைப் போலானார்கள்
போன வேகத்தில் புறா திரும்பி வந்தது
கையில் செய்தியோடு
மீண்டும் அவரச மகாநாடு கூடியது
மடல் உயில் போன்று அனைவரினதும்
முன்னே படிக்கப்பட்டது
அதிலே நேரிடையாக பதில் இல்லை
ஆனாலும் மறைமுகமாக
சம்மதம்தான் அர்த்தம் என்று
மொழிபெயர்த்தான் அறிவுஜீவி ஒருவன்.
குட்டிக் கவிஞர் ஒருவன்
இந்த பூமியில் உதயமாக காரணமானவள் அவள்
பசிக்கு பல தடவை
அகராதியில் அர்த்தம் தேடி
தோற்று விட்டேன்
நித்திரையில்லை
ஆனாலும் கனவில் அவள் வருவாள் என்பதால்
படுக்கையில் உருண்ட நாட்கள்தான் எத்தனை...?
இந்த உலகம் எனக்காகவே படைக்கப்பட்டது என்று
என மனம் தினமும் சொல்லும்
யார் மேலும் கோபம் இல்லை
அடித்தாலும் திட்டினாலும்
கோபம் மாத்திரம் வருவது கிடையாது!
பதில் செய்தியில் இருந்தே
நானும் அழகானவனா...?
என்ற புதிருக்கு விடை கிடைத்தது.
நாட்கள் வாரங்கள்
மாதங்கள் வருடங்கள் என்று கழிந்தன.
இப்போது தூதுவர் கிடையாது
ஒற்றர்கள் பயம் இல்லை காரணம்
அவர்கள் வீட்டிலும் எங்கள் வீட்டிலும்
எங்கள் உறவுக்கு
பச்சை கொடி காட்டி விட்டார்கள்.
காலத்திற்குத்தான் எவ்வளவு அவசரம்..?
கால சக்கரத்தின் சுழற்சியில்
அவள் என் மனைவியானாள் என்பதை விட
நான் அவளுக்கு கணவனானேன்
என்பதே தகும்.
மனிதர்களின் மனங்கள் இப்படியும் மாறுமா?
அன்று எனக்கு தேவதையானவள் இன்றும்
எனக்கு தேவதைதான்
ஆனால் அதிலே ஒரு சிறிய மாற்றம்
துர்தேவதை அவள்!
அவளுக்கு மட்டும் என்னவாம்
என்னை கட்டியதற்கு
சன்னியாசம் போயிருக்கலாம்
என்ற பல்லவி தான்
எங்கள் வீட்டு சுப்ரபாதம்!
சுகந்திரம் முற்றிலும் பறிபோன நிலையில்
வீட்டுக் காவலில் நான்.
பகலில் சிரித்த முகத்துடன் இருக்கும் அவள்
நான் வேலை விட்டு வீடு வந்ததும்
அவள் மெளனவிரதத்திற்கு மாறி விடுவாள்.
இனியும் மாற்றம் இல்லா வாழ்க்கை
வாழ்ந்தால், வாழ்வதிலே
அர்த்தமே இல்லாமல் போய் விடும் என்று
தொலைநோக்கோடு
எடுத்தேன் ஓர் முடிவு.
சுகந்திர காற்றை
சுவாசப்பை நித்தம் கேட்டு தொல்லை தந்தது.
கண்களை மூடி
சுகந்திர காற்றை சுவாசிக்கும் நோக்கோடு
ஏறினேன் சட்ட வாசல்
அங்கேயும் திண்டாட்டம்
முடிவு எடுக்க முடியாத படி
கையை இறுக பற்றிய என் குழந்தை.
www.nilafm.com
5 Comments:
கவிதை நன்றாக இருக்கிறது.
குழந்தையின் மூடிய கைகளை நன்றாக உபயோகித்து இருக்கிறீர்கள்.
நன்றியும், வாழ்த்துகளும்.
-ஞானசேகர்
வணக்கம் ஞானசேகர்.
உங்கள் வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி.
கவிதையாக ஒரு கதை ! அருமை றெனிமல் ! இளமைத் தவிப்புகளையும் புரளல்களையும் கண்முன் நிறுத்துகிறீர்கள் . வாழ்த்துக்கள் !
கூட்டிக், கழித்து, பிரித்தப்
பார்த்ததில் இந்த மகாநாட்டில்
நான் பதிவிட தகுதியுள்ளவளா என்று
தெரியவில்லை..
என் கொணட்டல் தமிழை வைத்து
நான் என்ன எழுதுவது என்று ஒரு
பயம்.
பலதடவை வாசித்தும்
எனக்குப் புரியாமல் போனது
இவை..!!
நன்றி...
நன்றி நித்தியா.
குழந்தை தமிழ் பேசினால், அது மழலைத்தமிழ்.
குமரி தமிழ் பேசினால், அது "கொணட்டல்" தமிழா?
இப்போது இருக்கும் பேச்சுத்தமிழ்கள் போதுமம்மா! நீயும் ஓர் தமிழைக் கூட்டிவிடாதே!
கழித்துச் விட்டுச்செல்! அல்லது உன்னோடு அழைத்தாவது சென்று விடு!
Post a Comment
<< Home